'விளையாட்டு வீரர்களுக்கு ரூ.90.24 கோடி அளவிற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


விளையாட்டு வீரர்களுக்கு ரூ.90.24 கோடி அளவிற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 July 2024 11:19 AM GMT (Updated: 30 July 2024 11:48 AM GMT)

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.90.24 கோடி அளவிற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டரங்கத்தில் இன்று (30.07.2024) சர்வதேச மாஸ்டர், மகளிர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற செஸ் வீரர், வீராங்கனைகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற 589 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.13.98 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துவரும் தமிழ்நாட்டு வீரர்களை தமிழ்நாடு அரசு எப்பொழுதும் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி பல்வேறு சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று பதக்கங்களைப் பெற்ற 589 வீரர்களுக்கு சுமார் 14 கோடி ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நமது இந்தியாவின் சார்பாக மொத்தம் 117 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை அடுத்து அதிக விளையாட்டு வீரர்களை அனுப்பி இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு அமைந்திருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள், சுமார் 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 17 பேர் பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்த 17 வீரர்களுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவின்படி தலா ரூபாய் 7 லட்சம் வீதம் 1.19 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் எனும் வீராங்கனை துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்திருக்கிறார். இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது தனது துப்பாக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக பதக்கத்தை தவறவிட்ட மனு பார்க்கர், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கடினமாக முயற்சி எடுத்து இன்றைக்கு இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார்.

இந்தியாவின் பதக்கப் பட்டியலில் உங்களுடைய பெயர்களும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கும் எனக்கும் இருக்கின்றது. இதற்கு தமிழ்நாடு அரசும், நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு துறையும் உங்களுக்கு என்றென்றும் உற்ற துணையாக இருக்கும்.

சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என தொடங்கப்பட்டதுதான் 'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' அறக்கட்டளை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக 100 க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகளுக்கு 9 கோடி அளவுக்கு அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது இந்த திராவிட மாடல் அரசு.

'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' அறக்கட்டளை சார்பில் நிதியுதவி பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புகளால் நம்முடைய வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நம்முடைய தமிழ்நாடு மாநிலம் முதன் முறையாக பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உள்ள விளையாட்டு வாய்ப்புகளில் வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். கழக அரசு அமைந்த பிறகு முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கை காரணத்தால் முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க இருக்கிறோம் என்று சட்டசபையிலேயே நான் பதிவு செய்தேன்.

அதில் முதல்கட்டமாக குறிப்பாக கூடிய விரைவில் 50 வீரர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்க இருக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் இதுவரை 2,756 வீரர்களுக்கு ரூபாய் 90.24 கோடி அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

வருங்காலத்திலும் இது தொடரும். நாம் எல்லோரும் இணைந்து தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத் துறையின் தலை நகராக மாற்றுவோம். உயரிய ஊக்கத்தை பெற வந்துள்ள அத்தனை வீரர், வீராங்கனைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்."

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story