ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்


ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி  நேரில் ஆறுதல்
x
தினத்தந்தி 9 July 2024 12:39 PM GMT (Updated: 9 July 2024 1:16 PM GMT)

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5ம் தேதி இரவு பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. கொலையாளிகள் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி பொற்கொடி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.


Next Story