விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. ரூ.1.34 லட்சம் சிக்கியது


விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.. ரூ.1.34 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 16 July 2024 7:24 PM GMT (Updated: 17 July 2024 7:16 AM GMT)

கணக்கில் வராத ரூ.1.34 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.மேலும் நேற்று அலுவலகத்தில் பணம் கைமாறுவதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரில் சிலர் சாதாரண உடையிலும், டிரைவர் போன்று உடை அணிந்தும் வந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் அலுவலக கதவுகளை பூட்டினார்கள். அங்குள்ள அனைத்து அறைகளிலும் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்தில் வெளியே இருந்த வாகனங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது பேரூராட்சி செயல் அலுவலரான மகேஸ்வரன் (வயது 59) என்பவரிடம் ரூ.1.09 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் அலுவலக பணியாளர்களிடம் ரூ.25,500 இருந்தது. இந்த பணத்திற்கு அவர்களிடம் கணக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கணக்கில் வராத ரூ.1.34 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story