திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்


திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2024 5:36 AM GMT (Updated: 13 Sep 2024 5:43 AM GMT)

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து 24-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன்.

சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த தவறிய இந்த திமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. மேலும், திமுக அரசின் முதல்-அமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.

கடந்த 40 மாதகால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.

திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story