திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு


தினத்தந்தி 14 Jun 2024 11:31 AM GMT (Updated: 14 Jun 2024 1:21 PM GMT)

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை புகுந்துள்ளது. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தை புகுந்த இந்த தனியார் பள்ளி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது. பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.

பள்ளி வளாகத்தையொட்டியுள்ள சாமன் நகர் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை, அங்குள்ள பழைய ஷெட்டுக்குள் தஞ்சம் அடைந்துள்ளது. தகவலறிந்து திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விரைந்து வந்தனர். மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் மூன்று குழுக்களாக பிரிந்த வனத்துறையினர், பள்ளி மாணவியரை பத்திரமாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பினர்.

மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என ஒலிப்பெருக்கியில் எச்சரித்தனர். ஷெட்டில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா அல்லது கூண்டை வைத்து பிடிப்பதா என வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மேலும் ஓசூரில் இருந்து மருத்துவர்கள் குழு திருப்பத்தூருக்கு விரைந்துள்ளனர்.


Next Story