2 சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் 15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை


2 சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் 15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 16 July 2024 11:26 PM GMT (Updated: 17 July 2024 7:13 AM GMT)

2 சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் 15 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வயது மற்றும் 5 வயதில் 2 மகள்கள் இருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து அந்த பெண், தனது 2 மகள்களையும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு, புதுச்சேரியை சேர்ந்த வேறொருவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அந்த சிறுமிகள் இருவரும் தங்கள் பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2017-18-ம் கல்வியாண்டில் 6 வயது சிறுமி 2-ம் வகுப்பும், அவரது தங்கை 1-ம் வகுப்பும் படித்தனர். அவர்களது பாட்டி, காலையில் விவசாய நிலத்திற்கு சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறந்த 2-வது வாரம் மாலை வேளையில் சிறுமிகள் இருவரும், தங்கள் பாட்டி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மகன் பிரசாந்த் (வயது 21) என்பவர், 6 வயது சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதேபோல் மற்றொரு நாளில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியையும் பிரசாந்த், தனது வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இவ்வாறாக 2 சிறுமிகளையும் தனித்தனியாக பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனிடையே சிறுமிகள் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, சிறுமிகள் இருவரும் பலரால், பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு சிறுமிகளின் தாய், பாட்டி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமிகளின் தாய், கடந்த 18.7.2019 அன்று பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் மட்டுமின்றி துரைராஜ்(47), ஜகினி என்ற துரைசாமி (55), ரவி மகன் தீனா என்ற தீனதயாளன் (24), ஆறுமுகம் மகன் அஜித்குமார் (22), இருசப்பன் மகன் பிரபா என்ற பிரபாகரன் (23), நாகப்பன் மகன் ரவிக்குமார் (23), ஆறுமுகம் மகன் அருண் என்ற தமிழரசன்(24), ராமலிங்கம் மகன் மகேஷ் (37), துரைசாமி மகன் ரமேஷ் (30), துரைராஜ் மகன் மோகன் என்ற சந்திரமோகன் (23), சின்னராஜ் மகன் செல்வம் (37), சுப்பிரமணியன் மகன் கமலக்கண்ணன் (30), வாசுதேவன் மகன் முருகன் (40), சின்னராஜ் மகன் செல்வசேகர் (30) ஆகியோரும் ஒரு வருடத்திற்குள் ஒவ்வொருவருக்கும் தெரியாமல் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் அந்த சிறுமிகள் இருவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 15 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே 5 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாள்.

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2 சிறுமிகளையும் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 15 பேருக்கும் தலா 20 ஆண்டு வீதம் 40 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீட்டு தொகையுடன், குற்றவாளிகள் 15 பேருக்கும் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையான மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தையும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.9 லட்சத்து 30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும், இந்த தண்டனை காலங்களை குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஏக காலம் என்பதால் 15 பேரும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும், பலத்த போலீஸ் காவலுடன் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து போலீஸ் வேனில் அழைத்துச்செல்லப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story