ஆதிதிராவிட மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு சிறப்பு பயிற்சி


ஆதிதிராவிட மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு சிறப்பு பயிற்சி
x

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதர சேவை மையத்தின் மூலம் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

புதுச்சேரி

ஆதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய புதுவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதர புதுவை சேவை மையத்தின் மூலம் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்களுக்கு இந்த மையத்தின் மூலம் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் தலைசிறந்த தனியார், அரசு பயிற்சி நிறுவனத்தின் மூலம் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் ஒருமுறை ஊக்கத்தொகை ரூ.4 ஆயிரத்து 800 வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் படித்த துறையில் வேலைபெற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இந்த ஓராண்டு பயிற்சியில் சேர ஆர்வமுள்ள 10, 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அல்லது பட்டய படிப்பை படித்து முடித்த மற்றும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மேற்கண்ட பயிற்சியில் சேரலாம். சிறப்பு பயிற்சிக்கான வயது வரம்பு 18-27 ஆகவும், மற்ற பயிற்சியில் சேருவதற்கு வயது வரம்பு 18-30 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பயிற்சியும் பகுதிநேர பயிற்சியாகவே அளிக்கப்படுகிறது. ஆகையால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். கணினி பயன்பாடு மற்றும் வணிக கணக்கியல் பயிற்சி 6 மாத காலமாகவும் மற்ற பயிற்சி ஓராண்டு காலப்பயிற்சியாகவும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் பிரதிமாதம் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச பாட புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story