போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை


போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகை
x

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டனர்.

பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு

திருக்கனூர் அருகே உள்ள சுத்துக்கேணி கிராமத்தில் தனியார் மாத்திரை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ம.க. சார்பில் சுவரொட்டி பல இடங்களிலும் ஒட்டப்பட்டது.

இந்தநிலையில் தங்கள் தொழிற்சாலை குறித்து அவதூறாக சுவரொட்டி ஒட்டப்பட்டது குறித்து பா.ம.க.வினர் மீது தொழிற்சாலையின் மனித வள அதிகாரி புகழேந்தி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ம.க. தொகுதி தலைவர் சுத்துக்கேணி ஏழுமலை, செயலாளர் தேவராசு, சமூக ஊடக பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதை கண்டித்து பா.ம.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி, தொழிற்சங்க துணை செயலாளர் அச்சுதன் தலைமையில் நேற்று காட்டேரிக்குப்பம் கடைவீதியில் திரண்டனர். அவர்கள் ஊர்வலமாக சென்று காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அங்கு விரைந்து வந்து பா.ம.க.வினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தனியார் தொழிற்சாலைக்கு ஆதரவாக தங்கள் நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதனை வாபஸ் பெறுமாறும் கோரிக்கை வைத்தனர்.

இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார். அதன்பேரில் பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story