கவர்னர் தமிழிசையுடன் கர்நாடக மேலவை குழுவினர் சந்திப்பு


கவர்னர் தமிழிசையுடன் கர்நாடக மேலவை குழுவினர் சந்திப்பு
x

கர்நாடக மேலவை குழுவினர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர். முதல்-அமைச்சர் ரங்கசாமியுடனும் ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி

கர்நாடக மேலவை குழுவினர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர். முதல்-அமைச்சர் ரங்கசாமியுடனும் ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக சட்டசபை குழு

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக கர்நாடக சட்டசபை துணைத்தலைவர் எம்.கே.பிரானேஷ் தலைமையிலான 6 சட்டமேலவை உறுப்பினர்கள் மற்றும் 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்தனர். கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களிடம், 'இந்தியாவில் அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். காவிரிநீர் பிரச்சினையிலும், சகோதரத்துவ உணர்வோடு பொறுப்புடன் செயல்பட்டு பகிர்ந்து கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார்.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

இதைத்தொடர்ந்து சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டமேலவை குழுவினர் சந்தித்தனர். அப்போது, சட்டசபை நிலைக்குழுக்களின் அதிகாரங்கள் மற்றும் அவை செயல்படும் விதம், செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்ததுடன் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி காட்டும் முனைப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் கர்நாடக குழுவினர் பாராட்டினர். இந்த சந்திப்பின்போது புதுச்சேரி சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். முன்னதாக சட்டசபையை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.


Next Story