போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
சுமை ஏற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ரங்கப்பிள்ளை வீதியில் வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோருடன் போக்குவரத்து போலீசார் ஆலோசனை கூட்டம் கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கலைச்செல்வன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசியதாவது:-
மொத்தமாக வசூல்
ரங்கப்பிள்ளை வீதியில் மொத்த வியாபார கடைகள் நிறைய உள்ளன. இங்கு தினமும் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள், சரக்கு வாகனங்கள் வருகின்றன. இவ்வாறு வரும் வாகனங்களை ரோட்டை அடைத்துக்கொண்டு நிறுத்தக்கூடாது.
பொதுமக்கள், வாகனங்கள் செல்ல வழிவிட்டு நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் அந்த வாகனங்களுக்கு இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத்தை கட்ட தவறுபவர்களின் விவரங்கள் போக்குவரத்து துறைக்கு தெரிவிக்கப்பட்டு வாகனங்களுக்கான உரிமங்கள் பெற செல்லும்போது மொத்தமாக வசூலிக்கப்படும்.
பறிமுதல்
எனவே வாகனங்களை எங்கே? எவ்வாறு நிறுத்த வேண்டும்? என்பதை உரிமையாளர்கள் தங்களது டிரைவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வாகன உரிமையாளர்களுக்குத்தான் சங்கடம்.
அதேபோல் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த வாகனங்கள் பறிமுதல் செய்து எடுத்து செல்லப்படும். வாகன உரிமையாளர்கள் அதை திரும்பப்பெற வரும்போது நாங்கள் வாகனத்தை எடுத்து சென்ற செலவுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
பொறுப்புணர்ந்து...
100 அடி ரோடு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் இது பொருந்தும். எனவே வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள், வணிக நிறுவனம் நடத்துவோர் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசினார்.