பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த அசாம் வாலிபர் கைது


பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த  அசாம் வாலிபர் கைது
x

இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி

இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலைவாய்ப்பு மோசடி

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு தேடுபவர்களை குறி வைத்து ஒரு கும்பல் வேலைவாய்ப்பு உள்ளதுபோன்று அவர்களை நம்ப வைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்பி மோசடி செய்வது வழக்கமாக உள்ளது. இதை நம்பி படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

இதேபோல் புதுவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோசடி செய்தது.

சமையல்காரர்

இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த ரியூபென், உகாண்டாவை சேர்ந்த நம்லே புரோசி, பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான குழு கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த லால் சங்லிர் சோரி (வயது 24) என்பவரது வங்கிக்கணக்கு மூலம் பணத்தை பெற்றிருப்பது தெரியவந்தது. 9-ம் வகுப்பு வரையே படித்த அந்த வாலிபர் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் சமையல் வேலை செய்துவந்தார்.

கைது

அவரது வங்கிக்கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால் சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர். மோசடி பணம் என்று தெரிந்தும் அதை அவர் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து லால் சங்லிர் சோரியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story