காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு


காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு
x

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கூறினார்.

புதுச்சேரி

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கூறினார்.

புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

253 காவலர்கள்

புதுவையில் 253 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் (https://recruitment.py.gov.in) மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக 14 ஆயிரத்து 173 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 14 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மீதமுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கான காரணத்தையும் அவர்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

அனுமதி சீட்டு

இதேபோல் 26 போலீஸ் டிரைவர் பணிக்கு 881 பேர் விண்ணப்பித்தனர். அதில் 4 பேரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

விண்ணப்பதாரர்கள் காவல்துறை இணையதளத்தில் அவர்களது உடல்தகுதி தேர்வுக்கான அனுமதி சீட்டை இன்று (புதன்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் அவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடக்கும் நேரம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.

எலக்ட்ரானிக் சிப்

உடல் தகுதி தேர்வுகள் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. நாளொன்றுக்கு 500 முதல் 1,000 பேர் அழைக்கப்பட்டு உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் காலை 6 மணிக்கு தொடங்கும். இந்த தேர்வுகள் 25 நாட்கள் வரை நடக்கும். வருகிற 31-ந்தேதி போலீஸ் டிரைவர்களுக்கான தேர்வும் நடத்தப்படும்.

ஓட்ட தேர்வில் எலக்ட்ரானிக் சிப் கொண்டு அவர்கள் ஓடும் நேரம் கணக்கிடப்படும். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். உடல் தகுதி தேர்வுக்கு பின்னர் எழுத்து தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நிறுத்திவைப்பு

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவலர் பணியில் சேர இளங்கலை, முதுகலை, என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.

காவலர் தேர்வு நடைமுறைகள் அனைத்தும் முழுக்க முழுக்க கேமரா மூலம் பதிவு செய்யப்படும். இதில் எந்தவித முறைகேடும் நடக்காது.

இவ்வாறு போலீஸ் ஐ.ஜி. சந்திரன் கூறினார்.

பேட்டியின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் தீபிகா, நாரா.சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மாறன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story