கவர்னர், முதல்-அமைச்சர் புறக்கணிப்பு


கவர்னர், முதல்-அமைச்சர் புறக்கணிப்பு
x

காலாப்பட்டு

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை கவர்னர், முதல்-அமைச்சர் புறக்கணித்தனர். இது தொடர்பாக நிர்வாகியிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம் செய்ததால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

துணை ஜனாதிபதி வருகை ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவதாக புதுவை பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை அரசு செய்து வந்தது.

இதற்கிடையே துணை ஜனாதிபதியின் புதுவை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

கவர்னர், முதல்-அமைச்சர் வரவில்லை

இந்த நிலையில் திட்டமிட்டபடி காலாப்பட்டில்உள்ள புதுவை பல்கலைக்கழகத்தில் 29-வது பட்டமளிப்பு விழா டாக்டர் அம்பேத்கர் நிர்வாக கட்டிடத்தில் இன்று மாலை நடந்தது. இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பெயர் அழைப்பிதலில் இருந்தும், அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம்

இந்த நிலையில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். இதனை பார்த்த உடன் விழா மேடையில் அமர்ந்திருந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. திடீரென்று எழுந்து,, பல்கலைக்கழக துணை வேந்தரிடம் நேராக சென்றார்.

விழாவில் கவர்னர், முதல்-அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்றால் அமைச்சர்கள், எம்.பி.க்களை வைத்து பட்டங்களை வழங்கலாம். அழைப்பிதழில் பெயர் இடம் பெறாத ஜிப்மர் இயக்குனர் எவ்வாறு பட்டங்கள் வழங்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

உடனே அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார் ஆகியோர் கல்யாணசுந்தரத்தை சமாதானம் செய்து, இருக்கையில் அமர வைத்தனர். இதன்பின் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர்.

31,857 பேருக்கு பட்டம்

விழாவில் 404 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் புதுவை பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த 21,208 மாணவர்களும், தொலைதூர கல்வி மாணவர்கள் 10,649 பேரும் என மொத்தம் 31,857 பேர் பட்டம் பெற்றனர். பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற 187 பேருக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிலையில், துணை வேந்தரிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம் செய்தது, திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story