கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்


கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்
x

அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி

அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கடும் வெப்பத்தினால் கரும்பு பயிர்களில் புதிய நோய்கள் உருவாகி முழுவதும் வேரிலிருந்து காய்ந்து அழிந்து வருகிறது. இந்த பாதிப்பை நோய் மருந்தும் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா திட்டத்தின்கீழ் புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகளுக்கு இலவசமாக கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளது. எனவே விவசாயத்துறை வல்லுனர்களும், காப்பீடு நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து கரும்பு பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு வழங்கி கரும்பு விவசாயிகளை காத்திட வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தமிழக பகுதியில் பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனடியாக அறுவடை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் புதுவை கரும்பு ஆணையர் புதுவை மாநிலத்தில பாதிப்படைந்த கரும்பு பயிர்களை உடனே அறுவடை செய்ய சர்க்கரை ஆலைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story