முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை


முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை
x

புதுவையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புதிய பணியிட மாறுதல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

புதிய பணியிட மாறுதல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இன்று காலை முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டனர்.

பணியிட மாற்றம்

புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்யும் ஆசிரியர்கள், தங்களுக்கு புதுவைக்கு பணியிடமாற்றம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கடந்த 17- ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது ரங்கசாமி, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை 2023- 24-ம் ஆண்டு ஆசிரியர் பணியிடமாறுதலுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் 55 வயதிற்கு மேற்பட்ட தலைமை ஆசிரியருக்கு வெளிபிராந்திய பணி இடமாறுதலில் இருந்தும், 57 வயது நிரம்பியவர்களுக்கு கிராமப்புற பணியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என தெரி விக்கப்பட்டது.

ஆசிரியர்கள் முற்றுகை

இதனை தொடர்ந்து புதுவையில் பணி செய்யும் 55 வயதிற்கு உட்பட்ட ஆசிரியர்களை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்து விட்டு அங்கு பணி செய்து வரும் 124 ஆசிரியர்களை புதுவைக்கு இடமாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இதற்கான உத்தரவு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பணிமூப்பு அடிப்படையில்...

அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆசிரியர்கள், புதிய பணியிட மாறுதல் கொள்கையை நிறுத்தி விட்டு பணி மூப்பு அடிப்படையில் பழைய முறைப்படி ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்க வேண்டும். கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசுங்கள். அவர் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பார் என்று கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நாளை (திங்கட் கிழமை) கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை ஆசிரியர்கள் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.


Next Story