பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்


புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்றுபோராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

புதிய கல்விக்கொள்கை

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த கல்விக்கொள்ளை அமல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடந்தது. புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தும்போது, அதில் பருவ தேர்வுகளில் தமிழ் பாடம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாணவிகள் போராட்டம்

இதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக கல்லூரியில் இருந்து மாணவிகளும், பேராசிரியர்களும் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலம் காந்திவீதி, எஸ்.வி. பட்டேல் சாலை, செஞ்சி சாலை வழியாக தலைமை தபால் நிலையம் வரை சென்றது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மாணவிகள் அவர்களிடம், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச வேண்டும் என்று கூறினர். அப்போது 5 மாணவிகள் மட்டும் முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

ரங்கசாமியுடன் சந்திப்பு

இதனை தொடர்ந்து 5 மாணவிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அவரிடம் புதிய கல்விக்கொள்கையால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது. எனவே புதுவையில் தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ரங்கசாமி, இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story