மாமூல் கேட்டு வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல்
புதுவையில் மாமூல் கேட்டு வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
புதுவையில் மாமூல் கேட்டு வடமாநில தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள்
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் அரசின் கட்டுமான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடலோர காவல்படை நிலையம், குடியிருப்பு மற்றும் கழிவறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 70-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், 20-க்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் லாஸ்பேட்டை மின்துறை அலுவலகம் அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.
மாமூல் கேட்டு தாக்குதல்
இந்த நிலையில் நேற்று இரவு, 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு இருந்த தொழிலாளர்களிடம், உங்கள் திட்ட மேலாளர் எங்கே, உடனே எங்கள் தலைவரை வந்து பார்த்து கொடுக்க வேண்டிய மாமூல் பணத்தை கொடுத்து விட்டு வேலையை பாருங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர் சென்று பார்க்கவில்லை.
இதற்கிடையே நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி, இரும்பு பைப்புடன் அங்கு வந்தனர். அவர்கள் எங்கள் தலைவரை வந்து பார்த்து மாமூல் தரமாட்டீர்களா? என கேட்டு வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் மாமூல் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்த தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 பேர் சிக்கினர்
இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சூர் பாஷா வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளர்களிடம் மாமூல் கேட்டு தாக்கியது யார்? என்று விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதில் 2 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாமூல் கேட்டு வடமாநில தொழிலாளர்களை நள்ளிரவில் மர்மகும்பல் தாக்கிய சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.