மனைவி, மகள், மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை


மனைவி, மகள், மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை
x

அரியாங்குப்பத்தில் விஷம் கொடுத்து தலையணையால் அமுக்கி மனைவி, மகள், மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் விஷம் கொடுத்து தலையணையால் அமுக்கி மனைவி, மகள், மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

கடன் தொல்லையால் நடந்த இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆட்டோ டிரைவர்

புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பச்சைவாழி (34). இவர்களது மகள் லட்சுமி தேவி (8), மகன் ஆகாஷ் (3).

இவர்கள் அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரன் வீதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தியாகராஜன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் லட்சக்கணக்கில் கடனாளி ஆகி சிரமத்துக்குள்ளான தியாகராஜன் தனது ஆட்டோவை வைத்து ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். அதை சரியாக திருப்பிச் செலுத்தாததால் அந்த நிறுவனம் ஆட்டோவை பறிமுதல் செய்தது.

வருமானமின்றி தவிப்பு

இதையடுத்து எலக்ட்ரிக்கல் தொழில் செய்து குடும்பத்தை தியாகராஜன் காப்பாற்றி வந்தார். ஆனால் அந்த தொழிலும் கை கொடுக்காமல் போதிய வருமானமின்றி தவிப்புக்குள்ளானார்.

கடன் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தியாகராஜன் மன உளைச்சலுக்குள்ளானார். இந்தநிலையில் நேற்று இரவு தனது மனைவி, மகள், மகனுடன் வீட்டில் தூங்கச் சென்றார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கியதையும், அவரது மனைவி, மகள், மகன் பிணமாக தரையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தியாகராஜன், அவரது மனைவி பச்சை வாழி, மகள் லட்சுமிதேவி, மகன் ஆகாஷ் ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலையணையால் அமுக்கி கொலை

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் விரக்தி அடைந்த தியாகராஜன் சரிவர வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளார்.

தான் மட்டும் இந்த முடிவை எடுத்து விட்டால் மனைவி, மகள், மகன் நிலைமை என்னவாகுமோ? என்று கருதி ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த விஷத்தை தூங்கச் செல்லும் முன் மனைவி, மகள், மகனுக்கு அவர்களுக்கே தெரியாமல் தியாகராஜன் கொடுத்ததுடன் மயங்கி கிடந்த அவர்களை ஒருவர் பின் ஒருவராக தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். அதன்பின் அவரும் அங்கேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் மனைவி, மகள், மகனை கொன்று ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story