தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


தி.மு.க.வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தி.மு.க.வை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி

ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தி.மு.க.வை கண்டித்து புதுவையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதை கொச்சைப்படுத்தி பேசுவதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் புதுவை ரெயில் நிலையம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உண்மையை எடுத்துக்கூறினார். ஆனால் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பாக தமிழக முதல்-அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் எம்.பி.யும் பேசியுள்ளார். ஒருவர் மீது விசுவாசம் காட்ட அடுத்தவரை பொய் பேசி அவமானப்படுத்தக்கூடாது என்பதை திருநாவுக்கரசர் உணர வேண்டும்.

சந்தர்ப்பவாத அரசியல்

அப்போது சட்டசபையில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரிஆனந்தன் இந்த சம்பவத்தை கண்டித்ததோடு தானும் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாக கூறியிருந்தார். இந்த உண்மை நிலையை உணர்ந்த அவரது மகளும் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் தைரியமாக பேசியுள்ளார். அவருக்கு புதுவை அ.தி.மு.க. நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் தி.மு.க.வுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அன்பழகன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார். துணை செயலாளர் எம்.ஏ.கே.கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story