கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட 4 மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள்


கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட  4 மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள்
x

காரைக்காலில் கடலில் குளித்தபோது, 4 மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் அலையில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 3 மாணவிகள் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமானார்.

காரைக்கால்

காரைக்காலில் கடலில் குளித்தபோது, 4 மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் அலையில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 3 மாணவிகள் மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமானார்.

காரைக்காலுக்கு சுற்றுலா

திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பு படித்து வரும் சிவக்குமார் (வயது 20), கொரோனா (20), அகிலாண்டேஸ்வரி (19), கனகலட்சுமி (19) உள்ளிட்ட 15 மாணவ, மாணவிகள் இன்று காரைக்காலுக்கு சுற்றுலா வந்தனர். காரைக்காலில் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்த அவர்கள் கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு சிவக்குமார், கொரோனா, அகிலாண்டஸ்வரி, கனலட்சுமி ஆகியோர் ஆர்வ மிகுதியில் கடலில் குளித்தனர். மற்றவர்கள் கரையில் இருந்து கடலின் அழகை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிவக்குமார் உள்பட 4 பேரும் அடித்து செல்லப்பட்டனர்.

மாணவர் மாயம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவ, மாணவிகள் கூச்சல் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் ஓடி 3 மாணவிகளை மட்டும் மீட்டனர். சிவக்குமார் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டதால் அவரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரைக்கால் நகர போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காப்பாற்றப்பட்ட 3 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

மாயமான மாணவர் முத்துக்குமாரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை மீறி...

காரைக்காலில் கடற்கரையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடற்கரை பகுதியில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. நேற்று கடல் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எச்சரிக்கையை மீறி மாணவர்கள் கடலில் குளித்ததால் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டனர். எனவே கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story