புதுவை நாடாளுமன்ற தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள்


புதுவை நாடாளுமன்ற தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள்
x

ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதியை கொண்ட புதுச்சேரியில் விரைவில் எம்.பி. தேர்தல் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

புதுச்சேரி

ஒரேயொரு நாடாளுமன்ற தொகுதியை கொண்ட புதுச்சேரியில் விரைவில் எம்.பி. தேர்தல் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தேர்தல் பணி

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை தேர்தல் கமிஷன் முழு வீச்சில் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் இறுதியில் இந்திய தேர்தல் கமிஷனின் ஆணையர் குழு தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது அவர்கள் புதுச்சேரி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தான் எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றும் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை எம்.பி. தொகுதி

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 30 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒரேயொரு எம்.பி. தொகுதி மட்டுமே தற்போது உள்ளது. புதுவை எம்.பி. தொகுதியில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 614 வாக்காளர்கள் உள்ளனர்.

அதாவது புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 25 தொகுதிகளில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 894 ஆண்கள், 4 லட்சத்து 43 ஆயிரத்து 907 பெண்கள், 122 மூன்றாம் பாலினத்தவர் என 8 லட்சத்து 39 ஆயிரத்து 923 வாக்காளர்களும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 75 ஆயிரத்து 421 ஆண்கள், 87 ஆயிரத்து 248 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவர் என 1 லட்சத்து 62 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story