அரசு, தனியார் பஸ் ஊழியர்கள் மோதலை தடுக்க நடவடிக்கை


அரசு, தனியார் பஸ் ஊழியர்கள் மோதலை தடுக்க நடவடிக்கை
x

அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க அரியாங்குப்பம் உள்ளிட்ட 3 இடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியாங்குப்பம்

அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க அரியாங்குப்பம் உள்ளிட்ட 3 இடங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடிக்கடி தகராறு

புதுச்சேரியில் இருந்து அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னியக்கோவில் வழியாக கடலூருக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதில் தனியார் பஸ்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இதே வழித்தடத்தில் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தனியார் பஸ் ஓட்டுனர்கள், அரசு பஸ் ஓட்டுனர்களுக்கு வழி விடாமல் சென்று பயணிகளை ஏற்றி சென்று தனியார் பஸ் நிறுவனங்களுக்கு வருவாய் ஈட்டி வருகின்றனர். பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அரசு, தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் சார்பில் "முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் பஸ் நிற்கும்" என அரசு பஸ்களின் பின்புறத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. அரசு பஸ்கள் நிறுத்துவதை தனியார் பஸ் டிரைவர்கள் வழிமறித்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

டிக்கெட் பரிசோதகர்கள் நியனம்

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் 3 இடங்களிலும் டிக்கெட் பரிசோதகர்களை நிறுத்த ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து முருங்கப்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் ஆகிய 3 இடங்களில் சுழற்சி முறையில் 12 பேர் டிக்கெட் பரிசோதகர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதன் காரணமாக தற்போது அரசு பஸ்கள் இந்த 3 இடத்திலும் கட்டாயமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதன்மூலம் சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு தொலைதூரம் செல்லும் பயணிகள் பெரிதும் பயனடைகின்றனர். இதில் குளிர்சாதன அரசு பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் அரசு பஸ்சில் பொதுமக்கள் விரும்பி பயணம் செய்வார்கள் என பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதேபோல் பூரணாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story