பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உடல் அருகே கிழிந்த டைரி... விசாரணையில் வெளிவராத தகவல்


பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உடல் அருகே கிழிந்த டைரி... விசாரணையில் வெளிவராத தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2024 3:40 AM GMT (Updated: 22 Aug 2024 7:16 AM GMT)

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் அவருடைய உடல் அருகே கிடைத்த டைரியின் சில பக்கங்கள் கிழித்து எடுக்கப்பட்டு உள்ளன.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். நாளை வரை (23-ந்தேதி) அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியிடங்களில் பாதுகாப்பை வழங்க கோரி இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. இதன்படி, குழுவானது, மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்குவதற்கான, வன்முறையை தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை உருவாக்குவதுடன், பாலினம் சார்ந்த வன்முறையை தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றையும் தயாரித்து வழங்கும்.

இந்நிலையில், பெண் டாக்டரின் உடல் அருகே கிழிந்த நிலையிலான டைரி ஒன்று கிடந்துள்ளது. அந்த டைரியில் சில பக்கங்கள் காணாமல் போயுள்ளன. மீதமுள்ள பக்கங்களில் அவருடைய கனவுகள், விருப்பு வெறுப்புகள், பெற்றோர் மீது கொண்ட பாசம் ஆகியவை பற்றிய விவரங்கள் எஞ்சியுள்ளன.

அவர் ஒரு பெரிய டாக்டராக விரும்பியிருக்கிறார். தங்க பதக்கம் வாங்கவும், மருத்துவ துறையில் பெரிய கவுரவங்களை அடையவும் விரும்பியிருக்கிறார். எம்.டி. படிக்கவும் விரும்பியுள்ளார் என அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது. ஒரு நாள்... என அவர் பணியாற்ற விரும்பும் சில மருத்துவமனைகளின் பெயர்களும் டைரியின் சில பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. அவருடைய பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விருப்பத்தினையும் டைரியின் பக்கங்கள் காட்டுகின்றன.

இந்த டைரி, சி.பி.ஐ.யின் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள விசயங்களை எழுதியது பெண் டாக்டர்தானா? என உறுதி செய்வதற்காக கையெழுத்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டு என டாக்டரின் பெற்றோர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

எனினும், அந்த டைரியின் சில பக்கங்கள் கிழித்து எடுக்கப்பட்டு உள்ளன. இது வழக்கில் பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனால், வழக்கில் பல விசயங்கள் வெளிவராத சூழல் உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story