பெண் டாக்டர் கொலை வழக்கு: போலீசாருக்கு கெடு விதித்த மம்தா பானர்ஜி


பெண் டாக்டர் கொலை வழக்கு: போலீசாருக்கு கெடு விதித்த மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 12 Aug 2024 10:13 AM GMT (Updated: 12 Aug 2024 10:28 AM GMT)

பெண் டாக்டர் கொலை வழக்கை ஞாயிற்றுக்கிழமைக்குள் நிறைவு செய்ய வேண்டுமென மாநில போலீசாருக்கு மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.கே. கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதேவேளை, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து மேற்குவங்காளம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரியும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டரின் குடும்பத்தினரை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, இந்த வழக்கை மாநில போலீசார் ஞாயிற்றுக்கிழமைக்குள் நிறைவு செய்ய வேண்டுமென கெடு விதித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா கூறுகையில், இந்த வழக்கை போலீசார் ஞாயிற்றுக்கிழமைக்குள் நிறைவு செய்யவில்லையென்றால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்போம். ஆனால், மத்திய விசாரணை அமைப்பின் விசாரணை வெற்றி விகிதம் (Success Rate) மிகவும் குறைவாகும்' என்றார்.


Next Story