இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்
இந்தியாவின் புகழ்பெற்ற அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார்.
புதுடெல்லி,
மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று அதிகாலை 3.20 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவரது இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று அணுசக்தி துறை அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
சிறந்த இயற்பியலாளரும் இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் ராஜகோபால சிதம்பரம் 1975 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்கு வகித்தவர். 1936-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் பிறந்த ஆர்.சிதம்பரம் மாநிலக்கல்லுாரியில் பட்டம் பெற்றார். பின்னர் பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் பி.எச்டி., பட்டம் பெற்ற அவர், 1962-ல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், அணுசக்தி ஆணையத்தின் தலைவர், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) ஆளுநர்கள் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். விஞ்ஞானி ஆர்.சிதம்பரத்துக்கு 1975-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1999-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கான சூப்பர் கம்ப்யூட்டர்களை உள்நாட்டிலேயே உருவாக்கியதில் முதன்மை பங்காற்றியவர் ஆர்.சிதம்பரம். மேலும் இந்தியாவின் அணுசக்தி திறன்களை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். உலகத்தரம் வாய்ந்த இயற்பியலாளராக, உயர் அழுத்த இயற்பியல், படிகவியல் மற்றும் பொருள் அறிவியல் ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி, இந்தத் துறைகளைப் பற்றிய அறிவியல் சமூகத்தின் புரிதலை உயர்த்தியது. இந்தத் துறைகளில் அவரது முன்னோடிப் பணி இந்தியாவில் நவீன பொருள் அறிவியல் ஆராய்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.