நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை: எதிர்க்கட்சிகள் கடும் அமளி


நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை: எதிர்க்கட்சிகள் கடும் அமளி
x
தினத்தந்தி 2 July 2024 11:15 AM GMT (Updated: 2 July 2024 12:19 PM GMT)

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது.இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். மக்களவை விவாதம் ஒன்றில் எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றிய இந்த முதல் உரையில் பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவேசமாக பதில் அளித்ததால், விவாதம் அனல் பறந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி தற்போது பேசி வருகிறார். பிரதமர் மோடி பேச்சை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி கூறியதாவது:

நாங்கள் திறம்பட பணியாற்றினோம் என்பது மக்களுக்கு தெரியும். 3-வது முறையாக சேவையாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். இந்தியாவை வல்லரசு நாடாக்க 24 மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறோம். 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாக தெரிகிறது. ஏழைகளின் நலனுக்காக நாங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்.வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்து விட்டது" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story