'வங்காளதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்' - பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் தகவல்


வங்காளதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் தகவல்
x
தினத்தந்தி 16 Aug 2024 12:23 PM GMT (Updated: 16 Aug 2024 12:30 PM GMT)

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் ஏற்பட்ட தொடர் வன்முறையை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு தப்பினார். இதையடுத்து வங்காளதேச ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.

இந்த நிலையில் இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் எப்போதும் அமைதியும், செழிப்பும் நிலவ வேண்டும் என்பதே நமது விருப்பம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்காளதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வங்காளதேசத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்.

ஜனநாயக ரீதியான, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்காளதேசத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தேன். வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story