தேர்தலுக்கு முன் திட்டங்கள்... அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாது; பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்


தேர்தலுக்கு முன் திட்டங்கள்... அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதுவும் செய்யாது; பா.ஜ.க.வை சாடிய சஞ்சய் ராவத்
x

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தேர்தலுக்கு முன் கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை அறிவிப்பது பா.ஜ.க.வின் தந்திரங்களில் ஒன்று என கூறியுள்ளார்.

புனே,

சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியை சேர்ந்த எம்.பி. சஞ்சய் ராவத் இன்று கூறும்போது, தேர்தலுக்கு முன் கோடிக்கணக்கான மதிப்பிலான திட்டங்களை அறிவிப்பது பா.ஜ.க. வழக்கம்போல் மேற்கொள்ளும் தந்திரங்களில் ஒன்றாகும் என கூறியுள்ளார்.

டெல்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு விசுவாசத்துடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்த ராவத், பா.ஜ.க.வின் கடைசி நேர முயற்சிகள் பொதுமக்களிடம் பெரிய தாக்கம் ஏற்படுத்த போவதில்லை என்றார். மராட்டிய தேர்தலின்போதும் இப்படி செய்யப்பட்டது.

5 ஆண்டுகளாக அவர்கள் எதுவும் செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, எல்லாவற்றையும் செய்ய அவர்கள் விரும்புகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் அமைதியாகி விடுவார்கள் என ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் ஷாகிபாபாத் மற்றும் புது அசோக் நகர் பகுதிகளுக்கு இடைப்பட்ட 13 கி.மீ. நீளத்திற்கு டெல்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, அந்த ரெயிலில் அவர் பயணம் மேற்கொண்டார். இந்த திட்டத்திற்கான செலவு ரூ.4,600 கோடி ஆகும்.

இதேபோன்று, டெல்லியில் ஜனக்புரி மேற்கு பகுதி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உள்ளார். இந்த கிருஷ்ணா பூங்கா விரிவாக்க நிலையத்துடன் சேர்த்து, டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கானது, மொத்தம் 289 நிலையங்களையும் 394.448 கிலோ மீட்டரையும் உள்ளடக்கி இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.1,200 கோடியாகும்.

இதன் பின்னர் அரசியல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.


Next Story