திட்டங்களை விரைந்து செயல்படுத்த உதவிய பிரகதி டிஜிட்டல் தளம்; ஆய்வில் வெளியான தகவல்
நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி இணையதளம் உருவெடுத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் வணிகப் பள்ளி கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பிரகதி டிஜிட்டல் தளம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளம் மூலம் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கப்படுகின்றன. பிரகதி (ஆக்கபூர்வ நிர்வாகம் மற்றும் விரைவான நடைமுறை)' என்ற வலைதளத்தின் செயல்பாடு குறித்த ஆய்வை "கேட்ஸ்' அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி மேற்கொண்டது
பெங்களூரு ஐஐஎம் (இந்திய மேலாண்மை நிறுவனம்) நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கள ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பிரகதி டிஜிட்டல் தளம், 205 பில்லியன் டாலர் மதிப்புள்ள 340 திட்டங்களை விரைவாக செயல்படுத்த எவ்வாறு உதவியது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஆய்வில் வெளியாகியுள்ள முக்கிய அம்சங்கள்:
*உள்கட்டமைப்புத் திட்டங்களின் கண்காணிப்புக்கான பிரகதி தளம்
2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, 50,000 கிலோமீட்டர் புதிய தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு இந்த தளம் உதவியாக அமைந்துள்ளது.
*மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்கேற்பு பிரகதி தளத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது டிஜிட்டல் கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பிட்ட திட்டங்களை ஆய்வு செய்வதில் பிரதமர் காட்டும் தீவிர ஈடுபாடு, அதிகாரத்துவ முட்டுக்கட்டைகளை உடைக்கவும், அமலாக்கத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
*உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஏற்படும் தடைகளைத் தீர்க்கும் தீர்வாக பிரகதி உருவெடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றில் தாமதங்களைத் தவிர்க்க பிரகதியின் ஒருங்கிணைந்த அணுகுமுறை உதவுகிறது.
* இந்த ஒருங்கிணைப்பு திட்டங்களின் செயல்பாட்டுக்கான காலக்கெடுவை வியத்தகு முறையில் குறைத்துள்ளது. ஒரு காலத்தில் 600 நாட்கள் வரை ஆன சுற்றுச்சூழல் அனுமதிகள் இப்போது 70 முதல் 75 நாட்களில் பெறப்படுகிறது.
*சமூகத் துறைக்கான பிரகதிதளத்தின் தாக்கம் உள்கட்டமைப்பைத் தாண்டி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துகிறது.
பிரகதி தளத்தின் மேற்பார்வையின் கீழ், கிராமப் புற வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, ஐந்து ஆண்டுகளில் 17 சதவீதத்தில் இருந்து 79 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
*மக்களின் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவை 32 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்க இந்த தளம் உதவியது.
* அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மத்திய - மாநில அரசுகள் திறம்பட ஒன்றிணைந்து செயல்படும் ஒரு நடுநிலையான மன்றத்தை பிரகதி உருவாக்கியுள்ளது.
*இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக பாரம்பரிய அதிகாரத்துவ, அரசியல் தடைகளைத் தாண்டி "குழுவாக இணைந்து செயல்படும் இந்தியா" என்ற கருத்தை இந்த தளம் உள்ளடக்கியுள்ளது.
* மற்ற தெற்குலக நாடுகளும் இதேபோன்ற உள்கட்டமைப்பு, நிர்வாக சவால்களை சமாளிக்க பிரகதியின் அணுகுமுறை உதவும். இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.