டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லி ரோகிணி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக பேரழிவு என்பதற்கு குறையாத ஆட்சி உள்ளது. இதை டெல்லி மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த பேரழிவை பொறுத்துக்கொள்ள முடியாது, மாற்றம் வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த மாற்றத்தை பா.ஜ.க. கொண்டு வரும்.
டெல்லியில் செயல்படுத்தி வரும் பல நலத்திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறுத்திவிடும் என்ற அச்சத்தை ஆம் ஆத்மி அரசு பரப்புகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது. ஆம் ஆத்மி அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட மத்திய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் தேக்கம் மற்றும் மாசுபாடு என டெல்லியின் பேரழிவு அரசாங்கம் ஒவ்வொரு சீசனையும் ஒரு அவசரநிலையாக மாற்றியது. எனவே, ஆம் ஆத்மி கட்சியை டெல்லியில் இருந்து அகற்றினால் மட்டுமே, வளர்ச்சி மற்றும் நல்லாட்சி என்ற இரட்டை இயந்திரம் வரும்.
மக்களவை தேர்தலின்போது டெல்லியில் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்கிய மக்கள், தற்போது சட்டசபை தேர்தலில் ஆசி வழங்க தயாராகி வருகின்றனர். டெல்லி மக்களின் இதயத்தை வெல்வதற்கும், பேரழிவிலிருந்து விடுபடுவதற்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.
இவ்வாறு அவர் பேசினார்.