இந்திய எல்லைக்குள் சீனா ராணுவ தளம் கட்டி வருகிறது: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு


இந்திய எல்லைக்குள் சீனா ராணுவ தளம் கட்டி வருகிறது: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 July 2024 10:29 AM IST (Updated: 8 July 2024 11:00 AM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைக்குள் சீனா எப்படி ராணுவ முகாம் அமைக்க முடியும்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இதை தடுக்க இரு நாட்டு ராணுவமும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனாலும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள பங்காங் ஏரியை சுற்றி ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை சேமித்து வைப்பதற்காக சீன ராணுவம் நீண்ட தூரத்துக்கு பதுங்கு குழிகளை ஏற்படுத்தி இருப்பது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. இதைப்போல ராணுவ வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக கூடாரங்களையும் அமைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-2020-ம் ஆண்டு மே மாதம் வரை இந்திய கட்டுப்பாட்டில் இருந்த பாங்காங் பகுதியில் சீனா எப்படி ராணுவ முகாம் அமைக்க முடியும்?நமது வீரர்கள் உயிர்தியாகம் செய்த கல்வான் பகுதியில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என மோடி அரசு கூறி 4 ஆண்டுகளை கடந்தபோதும் தற்போதும் சீனா தொடர்ந்து நமது பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது.

சீனா தொடர்ந்து நமது பகுதியை ஆக்கிரமித்து ராணுவ தளம் கட்டி வருகிறது. அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஏற்கனவே இருந்த நிலையை பராமரிக்காமல் விட்டதற்கு மோடி அரசுதான் பொறுப்பு. தேப்சாங் சமவெளி, டெம்சோக் மற்றும் கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட 65 முனைகளில் 26-வது ரோந்து முனையை நாம் இழந்து இருக்கிறோம்.அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதி நிலவரம் தொடர்பாக நாட்டுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு மல்லகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.


Next Story