5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை... லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது


5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை... லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2024 12:57 AM GMT (Updated: 4 Aug 2024 5:11 PM GMT)

தான் ஒரு போலீஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு போலீஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைதுசெய்ய போலீசார், ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி பொறி வைத்தனர். அந்த பெண் அதிகாரியை திருமணம் தொடர்பாக சமால் சந்திக்க வந்தபோது அவரை போலீசார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட சமாலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை திருமண தளங்கள் மூலம் குறிவைத்து தான் ஒரு போலீஸ் அதிகாரி எனக்கூறி சமால் அவர்களிடம் பேசியும் சந்தித்தும் வந்துள்ளார்.

பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை கட்டாயப்படுத்தி கார் மற்றும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. சமாலால் பாதிக்கப்பட்ட பெண், முதலில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று ரூ.8.15 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். மேலும் தொழில் தொடங்க ரூ.36 லட்சம் கொடுத்துள்ளார்.

மற்றொரு பெண், வங்கியில் கடன் வாங்கி ரூ.8.60 லட்சம் பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும் சமாலுக்கு கொடுத்துள்ளார். இந்த பணத்தின் மூலம் சமால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை திரும்ப கேட்டபோது துப்பாக்கியை காட்டி மிரட்டி வந்துள்ளார்.

அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், அவர் மேலும் 49 பெண்களுடன் மேட்ரிமோனியல் தளத்தில் சாட்டிங்கில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

அவரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், ரூ.2.10 லட்சம் ரொக்கம், கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் திருமணம் செய்துகொண்டதற்கான இரண்டு ஒப்பந்த சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றினர். சமலின் மூன்று வங்கிக் கணக்குகளையும் போலீசார் முடக்கினர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story