ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் சலசலப்பு


ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் சலசலப்பு
x
தினத்தந்தி 1 July 2024 9:42 AM GMT (Updated: 1 July 2024 11:00 AM GMT)

மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே என்று ராகுல்காந்தி கூறினார்.

புதுடெல்லி,

மக்களவையில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். ஜெய் சம்விதான் என அரசமைப்பை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் மக்களவையில் முதல் முறையாக விவாதத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே.

கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது.

பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடந்தது.

அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் சிவபெருமானின் படத்தை காங்கிரஸ் காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கும். கடவுளிடமே நேரடியாக பேசக்கூடியவர் பிரதமர் மோடி. சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல, அகிம்சைக்கானது. மக்களவையில் சிவன் படத்தைக்காட்ட அனுமதி இல்லையா? (சிவன், குருநானக் படங்களை ராகுல்காட்டிய நிலையில் அதற்கு அனுமதி இல்லையென சபாநாயகர் கண்டிப்புடன் தெரிவித்தார்)

அரசமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம். அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர். பிரதமர் மோடியோ, பா.ஜனதாவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல என்றார்.

ராகுல்காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜனதாவினர் வன்முறை இந்துக்கள், உண்மையான இந்துக்கள் அல்ல என ராகுல்காந்தி பேசியதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல்காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பா.ஜனதாவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று ராகுல் கூறியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.


Next Story