ஜாமீன் தடைக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால்


Arvind Kejriwal
x
தினத்தந்தி 26 Jun 2024 9:27 AM GMT (Updated: 26 Jun 2024 10:48 AM GMT)

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை கைது செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரசாரம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு திகார் சிறைக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிறிதுநேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று அவரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது பின்னர் கோர்ட்டின் உத்தரவு பெற்ற பின் கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் வைத்து கைது செய்தனர்.

முன்னதாக, டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் நேற்று, இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை கெஜ்ரிவால் தரப்பு வாபஸ் பெற்றது.

இதையடுத்து ஐகோர்ட்டு ஜாமீனுக்கு விதித்த தடையை உறுதி செய்து வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story