ஜம்மு காஷ்மீரில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; விமான சேவை பாதிப்பு


ஜம்மு காஷ்மீரில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 31 May 2024 11:44 AM GMT (Updated: 31 May 2024 12:53 PM GMT)

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது.

ஸ்ரீநகர்,

ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் 'ஏர் விஸ்தாரா' விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார். அந்த விமானத்தில் 178 பயணிகள் இருந்துள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். டெல்லியில் இருந்து 'ஏர் விஸ்தாரா' விமானம் வந்திறங்கிய பின்னர், உடனடியாக அதில் இருந்த பயணிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட வழித்தடத்திற்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியோடு விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் விமானத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது. வெடிகுண்டு மிட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story