அடிக்கடி சளி தொந்தரவு.. இடைவிடாமல் தும்மல் வருகிறதா? கவனம் தேவை..!
வேகமாகத் தும்மும்போது மூக்குக்கும், வாய்க்கும் நேராக கர்சீப் அல்லது துண்டை வைத்துக் கொண்டு தும்முங்கள்.
பொதுவாக, அடிக்கடி ஏற்படும் தும்மலும், இருமலும் , சளியும், ஒவ்வாமை மற்றும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே. அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சில வைரஸ் கிருமிகள் , உங்களுடைய மூக்கின் உள்பகுதியிலோ அல்லது தொண்டையின் உள்பகுதியிலோ வந்து உட்கார்ந்து கொண்டு கொடுக்கும் தாங்கமுடியாத குடைச்சலினால் ஏற்படுவதே தும்மல், இருமல் மற்றும் சளி ஆகும்.
மூக்கிலும், வாயிலும், நுரையீரலின் மேற்பகுதியிலும் நமக்குத் தெரியாமல் உள்ளே புகுந்துள்ள அந்நியப் பொருட்கள், வைரஸ் கிருமிகள் முதலிய தீங்கு விளைவிக்கக் கூடியவைகளை உடலிலிருந்து வெளியேற்ற, மூக்கு தொண்டை வழியாக காற்றை மிக வேகமாக வெளியே தள்ளி செய்யப்படும் ஒரு செயல் தான் தும்மல் ஆகும்.
தும்மல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் பெரும்பாலும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. முதற்காரணம் அலர்ஜி அதாவது ஒவ்வாமைதான். ஒத்துக்கொள்ளாத, பிடிக்காத வாசனைகள், செல்லப் பிராணிகளின் வளர்ப்பினால் வரும் ஒவ்வாமை, பிடிக்காத ரசாயனப் பொருட்களின் வாசனைகள், பிடிக்காத பொருட்களின் நெடிகள், சமையலறை நெடி, புகைகள், வாசனைத் திரவியங்களின் நெடிகள் , காற்றில் மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் , கண்ணுக்குத் தெரியாத தூசித்துகள்கள், தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் காற்றின் ஈரப்பதம் மாற்றம், ஜில்லென்ற சீதோஷ்ண நிலை போன்றவை உடனடியாக தும்மலை ஏற்படுத்திவிடும்.
சிலர் ஓரிரு தும்மலோடு முடித்துவிடுவார்கள். சிலர் 40, 50 தும்மல் போட்டபின்பு தான் நிறுத்துவார்கள். சிலருக்கு காலையில் எழுந்ததும் தரையில் காலை வைத்தவுடனேயே தும்மல் ஆரம்பித்துவிடும்.
அதிக வேகத்தில் தும்மினால் காது சவ்வு பிய்த்துக் கொள்ளலாம். மிகச் சிறிய ரத்தக் குழாய்கள் உடைத்துக் கொள்ளலாம். நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம். கவனம் தேவை. வேகமாகத் தும்மும்போது மூக்குக்கும், வாய்க்கும் நேராக கர்சீப் அல்லது துண்டை வைத்துக் கொண்டு தும்முங்கள். ஏனெனில் தும்மல் , சுமார் 27 அடி தூரம் வரை பரவக்கூடும்.
அதிக தடவை தும்மினாலோ, தொண்டையில் பிரச்சினை இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, மூக்கில் நீர் தொடர்ச்சியாக வடிந்து கொண்டிருந்தாலோ, டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை பெறுவது நல்லது. நான்கைந்து தும்மலுக்கெல்லாம் சிகிச்சை தேவையில்லை. விட்டுவிடுங்கள். தானாகவே சரியாகிவிடும்.
அடிக்கடி கையைக் கழுவுங்கள். வீட்டிலிருப்பவர்களுடன் நெருக்கமாக சேர்ந்து இருக்காதீர்கள். அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்களை உபயோகப்படுத்தாதீர்கள். அதன் அருகிலும் செல்லாதீர்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். புகை, நெடி, தூசி, மாசு அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள்.