அசத்தும் பலன்கள் தரும் 'அரிசி கழுவிய நீர்'


அசத்தும் பலன்கள் தரும் அரிசி கழுவிய நீர்
x
தினத்தந்தி 31 July 2022 7:00 AM IST (Updated: 31 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம். அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து ‘நொதித்தல்' முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

மக்குத் தெரியாத பல அழகு ரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர். கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பல நுாற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரிசி கழுவும் நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

தயாரிக்கும் முறை:

அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன் படுத்தலாம். அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து 'நொதித்தல்' முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.

தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை காற்று புகாத பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். இதை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

தலை முடி:

தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளித்தபின்பு, அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து, சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். முடி உதிர்வு கட்டுப்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

சருமம்:

அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, செல்கள் புத்துணர்ச்சி பெறும். சருமப் பொலிவு அதிகரிக்கும். இதில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு, முகப்பரு, தோல் அழற்சி ஆகியவற்றை நீக்கும். தூய்மையான பருத்தித் துணியை அரிசி நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால், சருமத் துளைகள் இறுகி, மேனி செம்மையாகும். அரிசி நீரில் உள்ள துவர்ப்புத் தன்மை, எண்ணெய்ப் பசையைக் குறைத்து முகப்பருவைத் தடுக்கிறது.

தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், சிறிது அரிசி நீரைக் கலந்து தடவும்போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இளமைப் பொலிவு அதிகரிக்கும்.


Next Story