சதுரங்கத்தில் சாதிக்கும் சிறுமி


சதுரங்கத்தில் சாதிக்கும் சிறுமி
x

செஸ் விளையாடுவது எனது நடைமுறை பழக்க வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. தினமும் மாலையில் 1 மணி நேரமாவது செஸ் விளையாடிவிட்டு தான் தூங்குவேன்.

திருச்சியைச் சேர்ந்த 13 வயது சிறுமி விதுளா, சதுரங்க விளையாட்டுப் போட்டியில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று, காமன்வெல்த் போட்டிக்கு செல்வதற்கும் தகுதி பெற்றுள்ளார். அவரது பேட்டி.

"எனக்கு பிடித்த விளையாட்டு செஸ். என் அப்பா வுடன் சேர்ந்து தினமும் விளையாட ஆரம்பித்தேன். ஒரு மாதம் தொடர் பயிற்சிக்குப் பின்னர், ஒன்றாம் வகுப்பு முதல் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

முதல் போட்டியில் பரிசு பெற்றது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது. அதைத் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன்.

செஸ் விளையாடுவது எனது நடைமுறை பழக்க வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. தினமும் மாலையில் 1 மணி நேரமாவது செஸ் விளையாடிவிட்டு தான் தூங்குவேன்.

என் அப்பாதான் எனக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். இப்போதுவரை எனக்கு பயிற்சி அளிப்பதும் அவர்தான். ஓய்வு நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் நானும், அப்பாவும் 3 மணி நேரம் தொடர்ந்து செஸ் விளையாடுவோம். மற்ற நேரங்களில் இணையத்தில் விளையாடுவேன்.

வருங்காலத்தில் 'கிராண்ட் மாஸ்டர்' ஆக வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் போட்டி எங்கு நடந்தாலும், என்னை அழைத்துச் செல்வதற்கு என் பெற்றோர் தயாராக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும், நடந்த போட்டிகளிலும் கலந்துகொண்டு 250-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். தேசிய போட்டிகளுக்காக டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்லும் போதெல்லாம், புதிய மனிதர்களிடம் பழகி, அவர்களுடைய விளையாட்டுத் திறனை தெரிந்துகொள்ளும்போது, இன்னும் அதிகம் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழும். 2019-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய போட்டியில் முதல் பரிசு வென்றேன்.

தேசிய போட்டிகளில் வென்றதை அடுத்து, ஆசிய இளையோர், உலக இளையோர் மற்றும் காமன்வெல்த் சதுரங்கப் போட்டிக்குச் செல்ல தகுதி பெற்றேன். உலக அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக சாதனை புரிய வேண்டும் என்பதே என்னுடைய கனவு.

சதுரங்கப் போட்டியில் விளையாடுவது, மூளைக்கு சுறுசுறுப்பையும், அறிவுக்கூர்மையும் அளிக்கிறது. பள்ளி படிப்பிலும், மற்ற போட்டிகளிலும் முதல் பரிசு தான் பெறுகிறேன்" என்கிறார் விதுளா.


Next Story