விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற... ... விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
Daily Thanthi 2024-07-13 01:35:14.0

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும்.

ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என்பது இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவந்துவிடும்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளும் கொண்டு வரப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அங்குள்ள தனி அறையில் 2 மேஜைகளில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

காலை 11 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மதியத்துக்கு மேல் வெற்றி நிலவரமும் தெரிந்துவிடும். வாக்கு எண்ணும் பணியில் 14 கிராம உதவியாளர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 150 பேர் ஈடுபடுகின்றனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க ஏதுவாக, வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 1,195 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story