சென்னை,  அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற... ... சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு
Daily Thanthi 2022-06-21 05:13:35.0
t-max-icont-min-icon

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் அலங்கார வளைவுகள், கட்-அவுட் அமைப்பதற்காக சாரம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சூழலில் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாக இருப்பதால், அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பொதுக்குழுவில் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக வெளியாகும் தகவல்களால் கலக்கம் அடைந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரது இல்லத்தில் குவிந்து வருகிறார்கள்.

மேலும் ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழுவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி 23ந் தேதி நடத்த வேண்டும் என 2300க்கும் அதிகாமன பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளதாகவும், பொதுக்குழுவை நடத்தவும், அதில் தவறாமல் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு மாவட்டசெயலாளர்கள் மூலம் கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே ஒற்றைத் தலைமை குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். சூழ்ச்சியை முறியடிப்போம். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. நானே முன்னின்று காத்து நிற்பேன் என்று தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை 8-வது நாளாக நீடித்து வரும் சூழலில், தங்களது ஆதரவு நிர்வாகிகளுடன் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனிதனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

* சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்தார்.

* வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி. தர்மர் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


Next Story