திருமணத்திற்கு மட்டுமல்ல.. காதலில் வெற்றி பெறவும் யோகம் இருக்க வேண்டும்


காதலில் வெற்றி பெற யோகம்
x
தினத்தந்தி 8 Aug 2024 12:03 PM GMT (Updated: 8 Aug 2024 12:10 PM GMT)

பொதுவான விதியை வைத்து, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களுக்கு மட்டுமே காதல் வெற்றி பெறும் என்று கூறிவிட முடியாது.

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், சுப காரியங்களை செய்யும்போது ஜாதக பலன்களை பார்ப்பதுண்டு. குறிப்பாக, திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க தவறுவதில்லை. திருமண யோகம் இருக்கிறதா? குழந்தைப்பேறு இருக்குமா? என்பதுபோன்ற பலன்களை கேட்டு அதன்படி ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்கின்றனர். திருமணத்திற்கு மட்டுமல்ல, காதலில் வெற்றி பெறுவாரா? என்பதையும் அவர்களின் ஜாதகத்தை வைத்து கணிக்கலாம்.

"கால தேச வர்த்தமான ஜாதிமத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம்" என்கிறது சோதிடம்.

இதன் பொருள்: காலத்திற்கேற்றவாறு இவ்வகை அனுபவங்கள் மாறுபடும். அதாவது இயற்கைக்கு மாறுபட்டு செயற்கையான வெளித்தோற்றத்தை நம்பிச் செல்லும் காளையர்கள், கன்னியர்களின் காதல் நிலைத்து நிற்பதில்லை.

இவ்வகையான காதல் ஏன் அமைகிறது என்று பார்ப்போமேயானால், அவரவர் ஜாதக கிரக நிலையே இதற்கு காரணமாகும். ஜாதகரீதியில் காதல் உணர்வுகளை தூண்டும் காதல் நாயகனான சுக்கிரனே இதற்கு மிக முக்கியமான காரணமாகும். மேலும், இவர் அனைவரையும் வசியம் செய்யும் கிரகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு காதல் உணர்வுகளை தூண்டுபவர் சுக்கிரனே. இந்த காதல் உணர்வு கொண்ட பொதுவான ராசிகள் என்று கூறும்போது, சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட அதாவது சுக்கிரனின் வீடான ரிசபம், துலாம் போன்ற ராசிகள்தான் என்பது ஜோதிட பொதுவிதி.

இந்த ராசிக்காரர்களுக்கு காதல் திருமண யோகம் அதிகம் உள்ளது. எனினும் இந்த பொதுவான விதியை வைத்து, இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு மட்டுமே காதல் வெற்றி பெறும் என்று கூறிவிட முடியாது.

சுக்கிரனின் வீடான ரிசபம், துலாம் போன்ற ராசிகளில் பிறந்தவர்களில் ஒரு சிலருக்கு காதல் கை கூடுகிறது (திருமணத்தில் முடிகிறது), சிலருக்கு தோல்வியுறுகிறது. எனவே, ராசியை மட்டும் வைத்து இவர் காதல் வெற்றி பெறும் இவர் காதல் தோல்வியுறும் என்று சொல்லிவிடக்கூடாது.

ஏனெனில் ஒருவர் ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரனும், ராசியும் மட்டும் தீர்மானிக்கவில்லை. கணவன் அல்லது மனைவி ஸ்தானமான 7ம் இல்லம், நட்சத்திரங்கள், குடும்ப ஸ்தானமான 2ம் இல்லம், 5ம் இடமான புத்தி ஸ்தானம் அவற்றில் அமையக் கூடிய கிரகங்களின் தன்மை, கிரகங்கள் வாங்கிய நட்சத்திரச் சாரங்கள் மற்றும் மேற்கூறிய இடங்களில் மறற கிரகங்களின் பார்வை ஆகியவையும் காரணமாகும். மேலும் சுக்கிரன் வலுபெற்று (ஆட்சி, உச்சம், நட்பு, திரிகோணம், கேந்திரம்) இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வெறும் காதலில் உறுதியுடன் இருக்க மனோகாரகனான சந்திரனும், 5 ம் இடமான புத்திஸ்தானமும், காதல் திருமணத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு சிலர் கட்டினா இவளைத்தான் கட்டுவேன் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம். அவ்வாறே, மணம் முடித்தும் காட்டுகிறார்கள். ஒரு சிலர் நன்றாக பழகி விட்டு பழகியவரை கைவிட்டு மற்றவரை கைபிடிக்கிறார்கள். இதற்கு காரணம் மனதிற்கு அதிபதியான சொந்தமான சந்திரன் கெட்டுப் போயிருந்தால் இவ்வாறு மனதை மாற்றிக் கொண்டு மற்றவரை மணமுடிப்பர். ஆகவே, மேற்குறிப்பிட்ட விதிகள் ஒருவர் ஜாதகத்தில் நன்கு அமையப்பெற்றால் அதாவது ஒருவரது ஜாதகத்தில் 7ம் இடத்ததிபதி நற்கோளின் பார்வைப் பெற்றும், 6,8,12 இம் இடங்களில் மறையவும், பாபர்களின் சேர்க்கைப் பெறாமலும் சந்திரன் வலுப்பெற்றும் (ஆட்சி, உச்சம், நட்பு) 5ம் இட அதிபதி கேந்திர கோணங்களில் அமையப்பெற்றும் இருந்தால் அவர்கள் காதல் வெற்றி பெறுவதுடன் இணைபிரியாமல் வையகத்தில் வாழ்வார்கள்.

காதல் செய்யும் காளையர்களுக்கும் கன்னியர்களுக்கும் தங்கள் காதலை காதல் நேரமான சுக்கிரன் ஓரையில் வெளிப்படுத்தினால் அவர்களது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஜாதக விதி சொல்கிறது.

காதல் கிரகமான சுக்கிரனுக்கு வெள்ளிகிழமை தோறும் மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து சுக்கிரனுக்கு பிடித்த சுக்கிர ஸ்துதி மந்திரத்தை வாரம் தோறும் 27 முறை கூறி வழிபட்டால் காதலில் வெற்றி பெற உதவும்.

சுக்கிர ஸ்துதி ஸ்லோகம்

ஹிமகுந்த ம்ருணா லாபம்

நைத்யாநாம் பரமம் குரும்

சர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்சவம் ப்ரணமாம்யஹம்

இந்த ஸ்லோகத்தில் சுக்ர ஓரையின் போது சொன்னால் நலம் தரும்.

சுக்கிர ஓரை நேரங்கள்

நாள் பகல் இரவு
திங்கள் 11 - 12 06 - 07
செவ்வாய் 08 - 09 10 - 11
புதன் 12 - 01 07 - 08
வியாழன் 09 - 10 11 - 12
வெள்ளி 06 - 07 08 - 09
சனி 10 - 11 12 - 01
ஞாயிறு 07 - 08 09 - 10

கட்டுரையாளர்: திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Next Story