ஜாதகப்படி அம்மா செல்லம் யார்?


ஜாதகப்படி அம்மா செல்லம் யார்?
x
தினத்தந்தி 18 Sep 2024 6:19 AM GMT (Updated: 18 Sep 2024 6:48 AM GMT)

ஜாதகத்தில் சுகஸ்தானம் மிகவும் சிறப்பாக இருந்தால் தாயன்பு பரிபூரணமாக கிடைக்கும்.

பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொரு விதமாக அழைப்பர். இவள் எங்கள் வீட்டின் கடைக்குட்டி என்றும், இவன் அம்மா செல்லம் என்றும், இவள் அப்பா செல்லம் என்றும் சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். சிறு வயதில் இவ்வாறு அழைப்பதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதை செல்லமாக எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், அவர்கள் பெரியவர் ஆகி திருமணம் ஆனபின் இவ்வாறு அம்மா செல்லம், அப்பா செல்லம் என்பது சில நேரங்களில் எதிர்வினையாற்றுகிறது. சிலர் இதை ஒரு குறையாகவே சொல்வதை பார்க்க முடியும். இதனால் குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இவ்வாறு அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை.. என ஒருவர் மீது தனிப்பட்ட அக்கறை மற்றும் பாசம் காட்டுவது பொதுவானதாக இருந்தாலும், ஜாதகரீதியாகவும் இதை பார்க்க முடியும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் அந்த ஜாதகதாரரின் ரத்த சொந்தங்களில் யார் அவருக்கு ஆதரவாக இருப்பார்? என்பதை கணிக்கலாம். அதன்படி சிலர் தங்களின் ஜாதகத்தில் பெற்றோருடனான பிணைப்பு, சகோதர- சகோதரிகள் ஒற்றுமை, யாரால் உதவி கிடைக்கும்? என்பதுபோன்ற கேள்விகளை கேட்டு தெளிவுபெறுவார்கள். சிலர், தாய் மாமன் உறவு எப்படி இருக்கும்? என்றும் கேட்பதுண்டு. இதேபோல் திருமணத்திற்கு சிலர் ஜாதகம் பார்க்கும்போதும் இதுபோன்ற அம்சங்களை பார்ப்பதுண்டு.

ஜாதகரீதியாக அம்மா பிள்ளை

ஜாதகத்தில் பன்னிரண்டு ஸ்தானங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்தானத்தை குறிக்கும். தாய் ஸ்தானத்தை குறிக்கக் கூடிய இடம் நான்காவது ஸ்தானம் தான். இதனை சுகஸ்தானம் என்றும் அழைப்பர். சுகஸ்தானம் என்றாலே புரிந்து கொள்ளலாம் தாயார்தான் நமக்கு அனைத்து மகிழ்ச்சியையும் அள்ளித் தருபவர். தன் பிள்ளைகளுக்கு சுயநலமின்றி அனைத்தையும் கொடுப்பவள் தாய். எனவே இந்த சுகஸ்தானம் மிகவும் சிறப்பாக இருந்தால்தான் தாயன்பு பரிபூரணமாக கிடைக்கும். அந்த ஸ்தானாதிபதி கேந்திரம் அல்லது திரிகோணமோ பெற்று இருப்பது மிகவும் சிறப்பு. அந்த ஸ்தானாதிபதி ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருப்பதும் தாயாரின் அன்பை பெற உதவும்.

அந்த சுகஸ்தானத்தை சுப கிரகங்களின் பார்வை பெற்று இருப்பது மேலும் சிறப்பு. அந்த இடத்தினை சுப கிரக பார்வை இன்றி பாப கிரகத்தின் பார்வை பெற்று இருந்தால் தாயாரால் நன்மை கிடைப்பது அரிது. பாப கிரகத்தின் சேர்க்கை இன்றி இருந்தால் மிகவும் நல்லது.

கிரக ரீதியாக என்று எடுத்துக்கொண்டால் சந்திர கிரகம் முக்கிய இடம் பெறுகிறது. சந்திரன் மிகவும் பலமாக இருந்தால்தான் தாயாரின் முழு அன்பும் நமக்கு கிடைக்கும். மேலும், சந்திரன் நீச்சம் அடையாமல் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்து அந்த கிரகம் மறையாமல் அதே நேரத்தில் கிரகண தோஷம் இல்லாமல் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த சந்திர கிரகம், கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் பாவகிரகங்களின் சேர்க்கை இன்றி சந்திரனை பாப கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் தாயாரின் ஆயுளும் தீர்க்காயுளாகவும் அவரின் உதவியும் என்றென்றும் கிடைக்கும். மேலும் அவரது தசா புத்தி நடந்தால் நிச்சயமாக தாயினுடைய அனுகூலம் கிடைக்கும்.

ஒரு சிலருக்குத்தான் சாகும்வரை தாயுடன் வாழக் கூடிய யோகம் இருக்கும். அதாவது பெண்களாக இருப்பினும் ஆண்களாக இருப்பினும் அவரது தாயாருடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் ஒரு சில வீடுகளில் பார்க்க இயலும். ஆனால், அவ்வாறு வாழ்வதும் ஒரு கொடுப்பினையே. பெற்றோருடன் அதாவது தாய் தந்தையருடன் தம் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதும், அதாவது கூட்டு குடும்பத்துடனும் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். அதேபோன்று தாயாருடன் ஆயுள்காலம் முழுவதும் வாழ்வது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டும்.

ஒரு சில ஜாதகக்காரருக்கு தாயின் அன்பு மட்டும் இல்லாமல் அவருடைய ஆஸ்தியும் கிடைக்கும். ஜாதகத்தில் தாய் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய அமைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதால்தான் அவருக்கு தாயால் ஏற்படக் கூடிய அனைத்து பலன்களும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.

ஆகவே, அம்மாவை நேசிப்பவர்கள் நிச்சயமாக தன்னுடைய மனைவியையும் நேசிப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அம்மாவை எந்த அளவிற்கு கவனிக்கிறாரோ அந்த அளவிற்கு பெண்ணியத்தை மதித்து, வாழ்க்கை துணைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவராக இருப்பார்.

கட்டுரையாளர்: திருமதி N.ஞானரதம்

செல்: 9381090389.


Next Story