சிம்மம் - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம்  - புரட்டாசி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2023 முதல் 17-10-2023 வரை

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன், யோககாரகன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல, ராசியிலேயே தன-லாபாதிபதி புதனும் இருக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொடர்ந்து இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்கள் எல்லாம் சாதகமாகவே அமையும் நேரம் இது.

புதன் வக்ரம்

புரட்டாசி 10-ந் தேதி கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. புதன் உச்சம் பெற்று வக்ரம் பெறுவதால் பொருளாதாரத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். சேமிப்புக் கரைந்தாலும் அது சுபச்செலவாகவே மாறும். தொழில், உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்படலாம். உத்தியோக முயற்சிக்காக ஏற்பாடு செய்தவர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

துலாம் - செவ்வாய்

புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தந்தை வழியில் இருந்த உறவு பலப்படும். ஒரு சிலருக்கு பெற்றோர் வழியில் தொழிலுக்கான மூலதனம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி, சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் பங்குதாரர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் - புதன்

புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். இக்காலம் உங்களுக்கு இனியகாலமாக அமையும். தன - லாபாதிபதி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தநேரத்தில் எதைச்செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும் நேரம் இது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பணம் சரளமாக புரளும். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ-மாணவிகளுக்கு எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாக அமையும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் கூடும். குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 22, அக்டோபர்: 1, 2, 6, 7, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.


Next Story