சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை
மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் குரு பகவான் பார்க்கிறார். எனவே இம்மாதம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறப்போகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் நடைபெறும். காரணம் குருவின் பார்வைதான். பஞ்சம அஷ்டமாதிபதியான குருவின் பார்வைக்கு பலன் அதிகம் உண்டு.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகு-கேதுக்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். அவர் குருவோடு இணைந்திருப்பதால் அனைத்து யோகங்களையும் வழங்குவார். அதே சமயம் 3-ல் சஞ்சரிக்கும் கேதுவையும் குரு பார்க்கிறார். குரு பார்வை காரணமாக கேது சஞ்சரிக்கும் ஸ்தானமும் புனிதமடைகிறது. எனவே இடையூறு சக்திகள் அகலும். சகோதரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நிலுவையில் இருந்த வழக்குகளில் நீங்கள் நினைத்தது போல் தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத தன லாபங்கள் வந்து இதயத்தை மகிழ்விக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைத்து நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கப்போகிறது.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வருவதால், தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். 'எவ்வளவு உழைத்தாலும் வியாபாரத்தில் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று நினைத்து, புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொருளாதார தட்டுப்பாடு அகலும். என்றாலும் ஒருதொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கைக்கு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாறலாம். 'மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன செய்யலாம்' என்று யோசிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இது ஒரு பொற்காலமாகும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி பெறுவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து கூடும். மாணவர்களின் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் உயரும். கணவன் - மனைவி உறவில் கனிவும், பாசமும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு பரிசீலனையிலிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 23, 24, 30, 31, ஜூன்: 3, 4, 5, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.