சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு வெற்றி காணும் சிம்ம ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சனியின் சப்தம பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. கண்டகச் சனியின் ஆதிக்கமும், சூரியன் மற்றும் ராகு சேர்க்கையும் இருப்பதால் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போவதால், மாதத் தொடக்கத்தில் முதல் வாரம் மகிழ்ச்சி குறைவாக இருந்தாலும், இரண்டாம் வாரத்தில் இருந்து இனிய பலன்கள் கிடைக்கும். சித்திரை 9-க்கு மேல் நல்ல பலன் நடைபெறப்போகிறது.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். இதனை 'கண்டகச்சனி' என்று சொல்வர். வாக்கிய கணித ரீதியான இந்த பெயர்ச்சியின் விளைவாக உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. நெருங்கிப் பழகுபவர்களால் நிம்மதி குறையும். அதிக முயற்சியின் விளைவாகவே ஒருசில காரியங்கள் கைகூடும். உத்தியோகம், தொழிலில் நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் விலகிச்செல்லும். குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாது. பணப்பரிமாற்றங்களில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய்-சனி பார்வை இருப்பதால் மிகக் கவனத்தோடு செயல்படுவதே நல்லது.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகின்றார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. 'குரு பார்வையால் கோடி தோஷம் விலகும்' என்பார்கள். அந்த அடிப்படையில் அதன் பார்வை அற்புதமான பலன்களை வழங்கப்போகின்றது. ஆரோக்கியம் சீராகும். இனிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். மருத்துவச் செலவுகளாலும், மற்ற காரியங்களின் தடைகளாலும் மனவருத்தத்தில் இருந்த உங்களுக்கு, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். சூரியனைக் கண்ட பளித்துளி விலகுவதுபோல, பட்ட துயரங்கள் விலகி ஓடும். சகோதர வர்க்கத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். தினமும் ஒரு நல்ல செய்தி வந்துசேரும் நேரம் இது. இக்காலத்தில் யோகபலம் பெற்ற நாளில் அனுகூல தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நற்பலன்களை வழங்கும்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி முதல் மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்போது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். அரசு வழியில் செய்த முயற்சியிலும் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

இம்மாதம் லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 20, 21, 25, 26, மே: 2, 3, 6, 7, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.


Next Story