சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் மாதத் தொடக்கத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன-லாபாதிபதியான புதனும், தொழில் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். எனவே வளர்ச்சிப் பாதையில் இருந்த இடையூறு அகலும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும்.
புதன் வக்ர இயக்கம்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். தன-லாபாதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை உயரும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவதால், சங்கிலித் தொடர் போல கடன் சுமை கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். வாசல் தேடி வந்த ஒப்பந்தங்கள் கை நழுவிச் செல்லலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வெளிநாடு சென்றவர்கள், அங்கே உரிய வேலை கிடைக்காமல் சொந்த ஊர் திரும்பும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முன்னேற்றத்தை அவர்களிடம் சொல்வதன் மூலம் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் மகரத்தில் உள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கும் போது உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கடன்சுமையின் காரணமாக மூடிக்கிடந்த தொழிலை ஏற்று நடத்த முன்வருவீர்கள். நினைத்த இலக்கை அடைய வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
புதன் வக்ர நிவர்த்தி
மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நல்ல பலன்கள் இல்லம் தேடிவரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்யும் முயற்சி கைகூடும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். இது ஒரு பொற்காலமாகும். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். அன்றாட செயல்களில் இருந்த தாமதம் அகலும். பெற்றோர் வழி ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார், உறவினர் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். சொத்துக்களால் லாபம் உண்டு. எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்வது நன்மையைத் தரும்.
செவ்வாய் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகிறது. எனவே சகல வழிகளிலும் நன்மை கிடைக்கும். தடுமாற்றங்கள் அகலும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும்.
இம்மாதம் ஞாயிறு தோறும் அனுமனை வழிபட்டால் ஆனந்தமான வாழ்க்கை அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 26, 27, ஜனவரி: 1, 2, 6, 7, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் உள்ள தடை அகலும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இல்லத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பெருமைக்குரிய பதவிகள் கிடைக்கலாம். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.