சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2022 முதல் 15-12-2022 வரை
நினைத்த காரியத்தை உடனுக்குடன் செய்ய நினைக்கும் சிம்ம ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தனம் மற்றும் லாபாதிபதி புதனோடும், தொழில் மற்றும் சகாய ஸ்தானாதிபதி சுக்ரனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். தொழில் வெற்றி நடை போடும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சனி மற்றும் குருவின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று இப்பொழுது சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தனி முயற்சி பலன் தரும். தடைகள் தானாக விலகும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு இனிய விதம் அமையும். வாழ்க்கைத் துணைக்கு வேலைவாய்ப்புக் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். 'இதுவரை பணி நிரந்தரமாகவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வந்துசேரும். கடந்த காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, அஷ்டம ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தியாகிப் பலம்பெறுகிறார். 8-க்கு அதிபதி பலம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. என்றாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவதால் அதன் விளைவாக நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அந்த மூன்று இடங்களும் புனிதமடைகின்றன. எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தட்டுப்பாடுகள் தானாக விலகும்.
தனுசு - புதன் சஞ்சாரம்
கார்த்திகை 12-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்வது ஒரு யோகமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏற வாய்ப்புகள் வாசல் தேடி வரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வெளிநாட்டில் உள்ள நண்பர்களின் மூலம் ஆதாய வரவு உண்டு. இழந்ததை மீட்கும் பணியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும்.
ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்
கார்த்திகை 13-ந் தேதி செவ்வாய், ரிஷப ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சொத்து விற்பனையால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு உண்டு. தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.
தனுசு - சுக்ரன் சஞ்சாரம்
கார்த்திகை 21-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானம் வரும் பொழுது நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் கல்யாண முயற்சிகள் கைகூடும் நேரம் இது. ஆடை, ஆபரணப் பொருட்களின் சேர்க்கை உண்டு. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடத் திறப்புவிழா, கடை திறப்பு விழாக்களில் கவனம் செலுத்துவீர்கள்.
இம்மாதம் சஷ்டி விரதம் இருந்து சண்முகநாதரை வழிபட்டால் சந்தோஷம் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 19, 20, 23, 24, 25, டிசம்பர்: 6, 7, 10, 11. மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உங்கள் ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். கேட்ட சலுகைகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமையல் பணியில் ஈடுபடும்போது கவனமாக இருங்கள்.