வெளிநாட்டு மாப்பிள்ளை யோகம் யாருக்கு?


வெளிநாட்டு மாப்பிள்ளை யோகம்
x

களத்திர ஸ்தானத்தைக் கொண்டு மட்டும் கணவன் வெளிநாடா என்று கணக்கிட முடியாது. அதன் அதிபதி எங்கே இருக்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும்.

பிள்ளைகளின் திருமணத்திற்காக ஜாதகம் பார்க்கும் பெற்றோர்கள், பொதுவாக திருமணம் கைகூடுவதற்கான யோகம் இருக்கிறதா? எந்த திசையிலிருந்து வரன் வரும்? எப்படிப்பட்ட வரன் அமையும்? திருமணம் சொந்தத்திலா அல்லது அசலிலா? என்று கேட்டு தெளிவுபெறுவார்கள். இதில், பெண் பிள்ளைகளுக்கு வரன் உள்ளூரில் அமையுமா? அல்லது வெளியூரில் அமையுமா? என்பது பற்றிய ஜாதக கணிப்புகளை பார்ப்போம்.

வெளிநாடு செல்ல இருக்க வேண்டிய கிரக நிலை என்ன?

ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் அவர்களின் ஜாதகத்தில் நீர் கிரகங்களான சந்திரன் சுக்கிரன் மற்றும் வீரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடத்தையும், பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்தையும் மற்றும் அயன சயன போக ஸ்தானமான பன்னிரெண்டாம் ஸ்தானத்தையும் தொலைதூரப் பயணம் செல்ல காரணமாகிறது.

திருமணத்திற்குப் பின் வெளிநாடு வாசம் எவ்வளவு காலம்?

ஒரு சிலர் திருமணம் ஆனபின் வெளிநாடு செல்லும் யோகம் இருந்தாலும் அவர்கள் நிரந்தரமாக குடியுரிமை வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தங்கி விட்டு மீண்டும் தன் தாய் நாட்டிற்கு வந்து விடுகிறார்கள். ஒரு சிலருக்கு அங்கேயே நிரந்தரமாக தங்கி குடியுரிமையையும் வாங்கி விடுகிறார்கள். இதற்கெல்லாம் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

வெளிநாட்டு மாப்பிள்ளையா என்று அறிந்து கொள்வது எப்படி?

பொதுவாக ஜோதிட விதிப்படி மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் இந்த ராசிக்காரர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் யோகம் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் பெரும்பான்மையாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதை பார்க்கலாம். அப்படியானால் மற்ற ராசிக்காரர்கள் செல்ல முடியாதா? என்ற கேள்வி தோன்றும். மற்ற ராசிக்காரர்களின் ஜாதகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு அவர்களால் வெளிநாடு செல்ல முடியாது என்று பொதுவாக சொல்லக்கூடாது. கிரக நிலைகளின் அடிப்படையில் கணித்து அறிந்துகொள்ளலாம்.

இங்கு நாம் குறிப்பாக பார்க்கப் போவது என்ன வென்றால் ஜாதகர் திருமணத்தினால் கணவருடன் அயல்நாடு பயணம் மேற்கொள்வாரா என்பதைப் பற்றிதான். அதற்குத்தான் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருப்பதற்கு முக்கிய காரணமான கிரகமான சந்திரனின் நிலை, சனியின் நிலை தொலைதூரப் பயணம் செல்ல காரணமான ஒன்பதாம் இடம், பன்னிரெண்டாம், இவ்விடங்களை பார்க்கும் கிரகம், இவ்விடங்களில் இருக்கும் கிரகம், இவ்விடங்களில் கணவருடைய ஸ்தானாதிபதி தொடர்புள்ளதா? போன்ற விவரங்களையும் நாம் தீர்க்கமாக கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இவ்விடங்களில் இணையும் கிரகம், மற்றும் லக்கினாதிபதியின் நிலை, மற்றும் நடைபெறும் திசா புக்தியின் நிலை போன்றவற்றையெல்லாம் பார்த்து விட்டுதான் மாப்பிள்ளை வெளிநாடா என்று முடிவெடுக்க வேண்டும்.

கீழ்க்கண்ட உதாரண ஜாதக கட்டங்களில் எங்கே என்ன கிரகம் இருந்தால் வெளிநாட்டு மாப்பிள்ளை அமையும் என பார்க்கலாம்.

மேற்கண்ட உதாரண ஜாதகம் 1-ல் இந்த ஜாதகருக்கு வரப் போகும் கணவன் வெளிநாடு என்பதை எப்படி அறிந்து கொள்ள இயலும் என்றால் இந்த பெண்ணின் லக்னம் மகரமாகும் மற்றும் கணவருடைய ஸ்தானத்தில் ஜல கிரகம் என்று சொல்லப்படும் சந்திரன் வீற்றிருப்பதும் மேலும் அந்த இடம் நீர் ஸ்தானமாகவும் இருப்பதால் ஜாதகிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்து வெளிநாட்டிலேயே இருவரும் குடியுரிமை பெற்றுவிடுவர்.

ஜாதகம் இரண்டில் ஏழாம் இடத்திற்கு அதிபன் விருச்சிக லக்னமான நீர் லக்னத்தில் வீற்றிருப்பதால் இந்த ஜாதகிக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்கும்.

ஜாதகம் மூன்றில் ஏழாம் ஸ்தானத்திற்குரிய புதன் நீர் ஸ்தானமான விருச்சிகத்தில் இருப்பதால் இந்த ஜாதகிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வாய்க்கும்.

ஜாதகம் நான்கில் இந்த ஜாதகிக்கு நீர் ராசியான விருச்சிக லக்னமாகவும் ஏழாம் ஸ்தானாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று நீர் ராசி என்று சொல்லப்படும் ஜல ராசியில் இருப்பதால் இவருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்கும்.

களத்திர ஸ்தானத்தைக் கொண்டு மட்டும் கணவன் வெளிநாடா என்று கணக்கிட முடியாது. அதன் அதிபதி எங்கே இருக்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். மேலும், மற்ற கிரகங்களின் அமைப்பையும் மற்றும் அவரவர்கள் இருக்கும் நட்சத்திரச் சாரம் மற்றும் நவாம்சம் போன்ற அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுதான் அவர்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை இருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும். மேலோட்டமாக பார்த்து விட்டு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

கட்டுரையாளர்: முனைவர். N.ஞானரதம்

Cell 9381090389


Next Story