பெண்கள் டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

Update: 2024-10-20 00:28 GMT

image courtesy: T20 World Cup twitter

துபாய்,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு நடக்கிறது. இதில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை தவறவிட்டு இருந்தது. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்