மகளிர் டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது
நவிமும்பை,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் உமா செத்ரி ஆகியோர் களம் இறங்கினர். இதில் உமா செத்ரி 24 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.இதில் ரிச்சா கோஷ் 20 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுர் களம் புகுந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 195 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கரிஷ்மா ராம்ஹராக் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது .
தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது . இந்த வெற்றியால் 3போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.